ஆபத்தான நிலையில் லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட சுபஸ்ரீ.. .. நெஞ்சை உலுக்கும் வீடியோ
திங்கள், 16 செப்டம்பர் 2019 (21:21 IST)
சென்னை, பள்ளிகரணையில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால், தனது மகள் திருமணத்திற்காக சாலை ஓரத்தில் வைத்திருந்த பேனர் விழுந்ததில், இளம் பெண் சுபஸ்ரீ நிலைகுலைந்து சாலையில் விழுந்தார். அவர் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விபத்து குறித்து, லாரி ஓட்டுநர் மனோஜ் என்பரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அந்த பேனரை அச்சிட்ட அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சுபஸ்ரீயின் மரணத்தால் அரசியல் கட்சி தலைவர்கள் இனி பேனர் வைக்க கூடாது என தங்களது தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல், சினிமாதுறையினருக்கும் பேனர் வைப்பதில் சமூக பொறுப்புடைமை வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது சுபஸ்ரீ சாலை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்த சுபஸ்ரீ தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, அருகில் இருந்தவர்கள் அவருக்கு உதவிசெய்துள்ளனர். உடனே 108 ஆன்புலன்ஸுக்கு போன் செய்து அழைத்துள்ளனர். அந்த நேரத்திற்கு ஆம்புலன்ஸ் எதுவும் வரவில்லை. ஆம்புலன்ஸ் வரத் தாமதமாகும் என்பதால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டி, அந்த வழியே வந்த ஒரு லோடு ஆட்டோவில் சுபஸ்ரீயை ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர்.
அதன்பின்னர். சுபஸ்ரீயை காப்பாற்ற எல்லோரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். விபத்து நடந்து 15 நிமிடங்கள் ஆகியும் அவர் உயிருடன் இருந்ததால் அவரை எப்படியும் காப்பாற்ற எண்ணினர். கடைசியில் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது வெளியாகியுள்ள, சுபஸ்ரீயை லோடு ஆட்டோவில் அழைத்துச் செல்லும் வீடியோ மனதை பதைபதைக்க வைத்துள்ளது.