குருக்ராம் பகுதியை சேர்ந்த பிரணய் கபூர் என்பவர், தனது காரின் டயரில் ஏற்பட்ட பஞ்சரை சரிசெய்ய பெட்ரோல் நிலையம் ஒன்றிற்கு சென்றபோது, மோசடி நபரிடம் சிக்கி ரூ. 8,000 இழந்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரணய் கபூர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, டயரில் காற்று குறைவாக இருப்பதாக எச்சரிக்கை விளக்கு எரிந்துள்ளது. உடனே, அருகில் இருந்த பெட்ரோல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள பணியாளர் டயரை சோதித்து, பஞ்சர் ஆகியிருப்பதாக தெரிவித்தார். பின்னர், டயரை கழற்றிப் பார்த்தபோது, மொத்தம் நான்கு பஞ்சர்கள் இருப்பதாக கூறி, அவற்றை தனித்தனியாகச் சரிசெய்ய ரூ. 1,200 ஆகும் என்று கூறியுள்ளார்.
ஆனால், அந்தப் பணியாளரின் பேச்சில் சந்தேகம் கொண்ட கபூர், தான் வழக்கமாக செல்லும் கடைக்கு சென்றுள்ளார். அங்கு சரிபார்த்தபோது, டயரில் ஒரு பஞ்சர் மட்டுமே உண்மையானது என்றும், மற்ற மூன்று பஞ்சர்களும் வேண்டுமென்றே ஒரு முள் போன்ற கருவியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்றும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி காரணமாக, கபூர் முழு டயரையும் மாற்ற வேண்டியிருந்ததால், அவருக்கு ரூ. 8,000 செலவானது. இதுபோன்ற மோசடிகள் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.