அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய இறக்குமதிகளுக்கு ஏற்கனவே 50% வரி விதித்துள்ள நிலையில், இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பதட்டத்தை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
மேலும், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் பிற நாடுகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு, இனிவரும் நாட்களில் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளின் மீதும் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அடுத்தடுத்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராக, இந்தியா திறமையாக சமாளித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் நலன்கள் தான் எப்போதும் முதன்மையானது என்றும், இதற்காக பெரிய விலையைக் கொடுக்க நேர்ந்தாலும் இந்தியா தயாராக இருப்பதாகவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்த உறுதியான நிலைப்பாடு, அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பணிய மாட்டோம் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. இந்த வர்த்தக பிரச்சினைகளால் இந்தியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படாது என்று பொருளாதார நிபுணர்கள் கருதுவதால், இந்தியா இந்த சவாலை நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது.