மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமில்லாமல், தொழில் முனைவோர்களாக வேண்டும் - அமைச்சர்‌ பொன்முடி!

திங்கள், 30 அக்டோபர் 2023 (22:20 IST)
திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் முதல்முறையாக பட்டமளிப்பு விழா நடைபெற்றது.


நாகை மாவட்டம் திருக்குவளையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு பொறியில் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 2018-2022-ம் ஆண்டு பொறியியல் படித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா  நடைபெற்றது.

விழாவுக்கு உயர்கல்வித்துறை அமைச்சரும்‌, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான க.பொன்முடி  தலைமை வகித்து திருக்குவளை, பட்டுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 3 அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியை சேர்ந்த 333 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

முன்னதாக அவர் பேசிய போது கூறியதாவது:- கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் பிறந்த திருக்குவளையில் இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இந்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி 2008-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் இந்த கல்லூரியில் பட்டமளிப்பு என்பது விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் இன்ஜினியரிங் படிப்பதற்கு நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதனால் கிராமப்புற இளைஞர்கள் கல்லூரியில் சேர்வதற்கு கஷ்டப்பட்டு வந்தனர். கிராமத்து இளைஞர்களின் நிலையை கருத்தில் கொண்டு 2007-ம் ஆண்டு துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து இந்த நுழைவு தேர்வை கலைஞர் ரத்து செய்தார்.

இதன் மூலம் பொறியியல் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 25,000 இருந்து 75 ஆயிரம் ஆக உயர்ந்தது. அதேபோல கல்லூரிகளில் தமிழ் வழி கல்வியை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தினார். பட்டம் பெற்ற மாணவர்களின் வாழ்க்கை இனிமேல் தான் தொடங்கியுள்ளது.

மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமில்லாமல், வேலை கொடுப்பவர்களாக, அதாவது தொழில் முனைவோராக இருக்க வேண்டும். பட்டம் பெற்ற மாணவர்கள் சமூக சிந்தனையுடனும், சீர்திருத்தத்துடனும் செயல்பட வேண்டும். பாடத்திட்டங்கள் காலத்திற்கு ஏற்ப பல்வேறு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த வளர்ச்சிக்கு ஏற்ப நான் முதல்வன் திட்டத்தின் மூலம் புதிய திட்டங்களை வகுத்து தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அதேபோல புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி பெண் கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறார்.

ஆனால் தற்போது பி.ஏ., பி.எஸ்சி, போன்ற கலை அறிவியல் பாடத்திற்கும் நுழைவு தேர்வு வரும் என்று தெரிகிறது. அப்படி வந்தால் இரு மொழி கொள்கைக்கு ஆபத்து ஏற்படும் என்றார்.

விழாவில் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ரா.வேல்ராஜ்,கீழ்வேளூர் சட்ட பேரவை உறுப்பினர் வி.பி.நாகை.மாலி, மாவட்ட வருவாய் அலுவலர் பேபி,மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கெளதமன், தாட்கோ தலைவர்  உ.மதிவாணன்,

திருக்குவளை கல்வி வளர்ச்சிக் அறக்கட்டளை குழு உறுப்பினர் சோ.பா. மலர்வண்ணன் ஊராட்சி  தலைவர் இல.பழனியப்பன்,  கல்லூரி முதல்வர்கள் திருக்குவளை ஜி.இளங்கோவன், அரியலூர் செந்தமிழ் செல்வன், பட்டுக்கோட்டை கார்த்திகேயன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
Edited By: Sugapriya Prakash

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்