ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனின் கார் உடைப்பு: மர்ம நபர்கள் அட்டூழியம்

வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (17:10 IST)
ஆர்கே நகர் தேர்தலில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனனும், சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரனும் போட்டியிடுகின்றனர். இதனால் இந்த தேர்தல் களம் 24 மணி நேரமும் பரபரப்புடனே நகர்கிறது.


 
 
ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தேர்தல் நிலவரம் உள்ளது. இரு அணியினரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர்.
 
இந்த தேர்தலின் முக்கிய பிரச்சார பொருளாக இருப்பது ஜெயலலிதா மரண விவகாரம் தான். இந்நிலையில் நேற்று ஓபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் ஜெயலலிதாவின் பிணத்தை போன்ற போலி ஒன்றை வைத்து பிரச்சாரம் செய்தனர்.
 
இதற்கு சசிகலா அணியினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனால் நேற்று இரவு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மண்டை உடைக்கப்பட்டு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் நேற்று, ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகரில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் மதுசூதனன் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்ற விபரம் இன்னமும் தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்