காவிரி விவகாரம்; போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது

ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (13:18 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதேநேரம், தமிழக அரசு, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 
 
இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம்  குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
 
இதனையடுத்து நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 5 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றார்.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர், உள்ளிட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலினும் கைது செய்யப்பட்டுள்ளார். எங்களை கைது செய்தாலும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்