முரசொலி விழா : அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்

புதன், 28 ஜூன் 2017 (17:56 IST)
முரசொலி நாளிதழ் பவள விழாவில் பங்கேற்குமாறு அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சமீபகாலமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவிடம் இணக்கமாக உறவாடி வருகிறார்கள். முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்களுடன் சிரித்து பேசுகிறார் எனக்கூறி அவரின் பதவியை பறித்தார் சசிகலா.
 
சமீபத்தில், மாட்டிறைச்சி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடியின் விளக்கத்தில் திருப்தியில்லை எனக்கூறி, அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களான கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த போது, திமுக உறுப்பினர்கள் மேஜையில் தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
 
மேலும், சட்டசபை நடவடிக்கைகளின் போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலர், திமுக உறுப்பினர்களுடன் சகஜமாக உரையாடுவதை பார்க்க முடிந்தது.
 
இந்நிலையில், முரசொலி பவள விழா வருகிற ஆகஸ்டு மாதம் திமுக சார்பில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கி வருகிறார். 
 
இந்நிலையில், அந்த விழாவில் பங்கேற்குமாறு கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அதிமுக தோழமை கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுத்துள்ளார். ஆளுங்கட்சியின் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுத்துள்ள விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்