ரெடியாகும் சின்ன தளபதி: தலைவர் ஸ்டாலின் க்ரீன் சிக்னல்?
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (18:01 IST)
நான் திமுகவில் இருப்பதால் அடுத்து என் மகனும் திமுகவில் இருப்பதில் என்ன தவறு என கேட்டு திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதியின் அரசியல் வரவை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் குடும்ப அரசியல் நேரு காலத்தில் இருந்தே துவங்கியது. தமிழகத்தில் கருணாநிதியின் மூலம் துவங்கியுள்ளது. கருணாநிதி திமுக தலைவராக இருந்த போதே அவரது மகன்களான அழகிரி மற்றும் ஸ்டாலின் அரசியலில் ஈடுப்பட்டனர். இதற்கு அப்போதே கடும் விமர்சனங்கள் எழுந்தது.
தற்போது கருணாநிதியின் மறைவிற்கு பிறகு ஸ்டாலின் திமுக தலைவர் பதவியை ஏற்றுள்ளார். இதனால், திமுகவில் குடும்ப அரசியல்தான் நடக்கிறது என பேச்சுக்கள் வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் அடுத்து கட்சியில் தலைத்தூக்குகிறார். இது குறித்து ஸ்டாலினிடம் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார்.
உதயநிதி, இப்போது அரசியலில் இறங்கவில்லை. ஆனால், அரசியலில் எப்போதும் இருக்கிறார். கட்சியில் ஒருவர் இருக்கிறார் என்றால், அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்சியில் இருக்கிறார்கள் என்றுதான் பொருள். குடும்பம், குடும்பமாக இணைந்திருப்பதுதான் திமுக.
வாழையடி வாழையாக வந்திருக்கும் மாமணிதான் திமுக. இது பாரம்பரிய திராவிட இயக்கம். எனவே தந்தையும் மகனும் இயக்கத்திற்காக பாடுபடுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.