திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் என்பது திமுகவுக்கு ஒரு சவாலான தேர்தலாக கருதப்படுகிறது. இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் மட்டுமே ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவராக மற்ற கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் நிலை உள்ளது. இதனால் இந்த தொகுதியில் தானே போட்டியிட ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்து அவர் கட்சி நிர்வாகிகள், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி ஆர் பாலு, கனிமொழி, ராசா, உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தாலும், அவர் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்பதால் அவர் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், திருவாரூரில் வெற்றி பெற்றுவிட்டால் அவர் கொளத்தூர் தொகுதியை ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் தவிர எந்த வேட்பாளர் நின்றாலும் கடுமையாக போட்டி கொடுக்க காத்திருந்த அமமுக, அதிமுக, ஸ்டாலினின் இந்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.