தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம்.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Siva

செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (20:16 IST)
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மீனவர்கள் அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் 10 மீனவர்களை, வரும் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடியைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட நிலையில் கைதான மீனவர்கள் இன்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

 மீனவர்களிடம் விசாரணை செய்த பின்னர் 12 மீனவர்களும் ரூபாய் 1.5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அபராத தொகையை செலுத்த தவறினால் ஆறு மாத காலம் சிறை தண்டனை என்றும் இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழக மீனவர்களுக்கு பெரும் தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அபராதம் விதிக்கப்பட்ட மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர் சங்கங்கள் கூறி வருகின்றன.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்