தென்னிந்தியாவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழி பேசப்படுகிறது. இவர்களில் ஒருவர் இன்னொரு மொழியை கற்றுக் கொள்வது கடினம். எனவே, பொதுவான மொழியாக ஹிந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
"இந்தி தேசிய மொழியாக குறிப்பிடுகிறீர்களா?" என்ற கேள்விக்கு, "அவ்வாறு நான் குறிப்பிடவில்லை. ஆனால் தென்னிந்தியர்கள் கூடுதலாக ஹிந்தி மொழியை பொதுவான ஒரு மொழியாகக் கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்," என்று தெரிவித்தார்.
"தென்னிந்தியாவில் உள்ள மற்ற மாநில முதல்வர்களுடன் நீங்கள் மாறுபடுகிறீர்கள் என்று எண்ணலாமா?" என கேட்ட கேள்விக்கு, "ஹிந்தியை கூடுதலாகக் கற்றுக்கொள்வது பிராந்திய இடைவெளியை குறைக்க உதவும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து," என்றும் கூறினார்.
"தமிழர்கள் தெலுங்கையும், தெலுங்கர்கள் தமிழையும், கன்னடர்கள் மற்றும் மலையாளிகள் மற்ற தென்னிந்திய மொழியையும் படிப்பதற்கு பதிலாக, தென்னிந்தியர்கள் அனைவரும் பொதுவான ஒரு மொழியான ஹிந்தியை கற்றுக்கொண்டால், வடஇந்தியர்களுடன் நெருக்கமாக பழகவும் அது உதவும்," என்றும் அவர் தெரிவித்தார்.