சென்னை பெருங்குளத்தூர் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ளது தனியார் பெட்ரோல் பங்க். ஞாயிறு அன்று இரவு 10 மணிக்கு இரவு நேர ஊழியர்கள் மட்டும் பணியில் இருந்தனர். ஒரு சிலர் வண்டிகளில் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் முகமூடி அணிந்து இரண்டு பேர் வந்தனர். வண்டியை விட்டு இறங்கியதும் கையில் இருந்த பட்டாக்கத்தியை கொண்டு அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த மர்ம நபர்களை தடுக்க முயன்றனர்.
அப்போது மேலும் பைக்குகளில் வந்த ஏழு பேர் அங்கிருந்தவர்களை பயங்கரமான ஆயுதங்களால் தாக்க தொடங்கினர். பின்னர் பெட்ரோல் பங்க் உரிமையாளரையும், அவரது மகனையும் தாக்கிவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு மர்ம கும்பலை தேட தொடங்கினர். அதில் ஏழு பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தாக்குதலுக்கான காரணங்கள் தெரிய வந்துள்ளது.
மணி என்ற நபர் தனது நண்பருடன் பெட்ரோல் போட அந்த பங்கிற்கு காலையில் சென்றுள்ளார். அப்போது மணிக்கு, பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மணி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கியுள்ளார். இதை கண்டு உடனே அங்கு வந்த மற்ற ஊழியர்கள் மணியையும், அவருடன் வந்த நண்பரையும் தாக்கியுள்ளனர். அதற்கு பழிவாங்குவதற்காகவே தனது நண்பர்கள் ஏழு பேரை அழைத்து கொண்டு ஆளில்லாத இரவு நேரத்தில் பெட்ரோல் பங்கை தாக்கியுள்ளார் மணி. 7 பேர் சரணடைந்த நிலையில் மணியையும் அவரது நண்பரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.