சிவன் கோவிலில் நரபலி – எதற்காக? ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம்?

செவ்வாய், 16 ஜூலை 2019 (15:50 IST)
ஆந்திர மாநிலத்தில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் வெட்டப்பட்ட மூன்று மனித தலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பீதியை கிளப்பியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை அடுத்து உள்ள சிறு கிராமம் கொத்திகொட்டா. பழமை மாறாத இந்த கிராமத்தில் பழங்காலத்து சிவன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலை தினம்தோறும் சுத்தம் செய்து, பூஜைகள் செய்யும் பணியை அந்த கிராமத்தை சேர்ந்த சிவராம் என்பவரும், அவரது சகோதரி கமலம்மாவும் செய்து வந்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னால் ஒரு உறவுக்கார இளம்பெண் சிவராம் வீட்டிற்கு வந்துள்ளார். அதற்கு பிறகு சிவராமையும், கமலம்மாவையும் ஊரில் யாரும் பார்க்கவில்லை. எதேச்சையாக சிவன் கோவிலுக்கு வழிபட சிலர் சென்றிருக்கிறார்கள். அங்கு அவர்கள் பார்த்த காட்சி அவர்கள் ரத்தத்தையே உறைய செய்யும் அளவுக்கு இருந்தது. கோவில் பிரகாரத்திற்குள் மூன்று மனித தலைகள் வெட்டப்பட்டு கிடந்தன.

அதில் இருவர் பூஜை பணிகள் செய்து வந்த சிவராம், கமலம்மா. மற்றொருவர் அவர்கள் வீட்டிற்கு விருந்தினராக வந்திருந்த பெண். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ஊருக்குள் ஓடிப்போய் விஷயத்தை சொன்னார்கள். ஊர்க்காரர்கள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த கோவில் சிவலிங்கத்தின் மீது ரத்தக்கறையாக இருந்தது. மேலும் கோயிலை சுற்றிலும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீஸார் தலைகளை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். அவர்களது உடல் என்னவானது என்பது குறித்தும் தேடி வருகின்றனர். யாரோ சிலர் இவர்களை நரபலி கொடுத்து அந்த ரத்தத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்திருக்கின்றனர் என ஊர்மக்கள் நம்புகின்றனர். அந்த கிராமத்தை சுற்று உள்ள பகுதிகளில் புதையல் இருப்பதாக பல காலமாக ஒரு கதை நிலவி வருகிறது. அந்த புதையல் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த நரபலி சம்பவம் நடந்திருக்க வேண்டுமென மக்கள் நம்புவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்