சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக கழன்று ஓடிய 3 பெட்டிகள்: பயணிகள் அதிர்ச்சி;

Siva

வியாழன், 19 செப்டம்பர் 2024 (07:32 IST)
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் இரவு பயணத்தை தொடங்கியது. திருச்சி ரயில் நிலையத்துக்கு நேற்றிரவு 1.20 மணிக்கு வந்த ரயில், 1.40 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது.

ரயில் நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரம் பயணித்த போது, ரயிலின் கடைசி பகுதியிலிருந்த எஸ்-1 பெட்டி, பொதுப் பெட்டி மற்றும் மகளிர் பெட்டி என மூன்று பெட்டிகள் ரயிலிலிருந்து பிரிந்தன. இதனால் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் பதற்றமடைந்து கூச்சலிட்டனர். இந்த சம்பவத்தை உணர்ந்த ரயிலின் லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார், மேலும் பிரிந்த பெட்டிகள் சில தூரம் சென்ற பின்னர் தானாகவே நின்றன.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும், ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து, ரயில் பெட்டிகளை மீண்டும் இணைக்கும் பணிகளை மேற்கொண்டனர். இந்த பணிகள் முடிந்து, ஒரு மணி நேரம் தாமதமாக, அதிகாலை 2.30 மணிக்கு ரயில் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டது.

பெட்டிகள் பிரிந்த விவகாரம் தொடர்பாக சென்னை பராமரிப்பு பணிமனையில் விசாரணை நடைபெறும். இது தொடர்பான அறிக்கை வழங்கப்படும். பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்