சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இதனிடையே, செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால், சென்னை மாவட்ட 3 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வழக்கை விசாரித்தார். அப்போது, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி ஆனந்த் முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணையின் போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.