சமீபமாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்கள் அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சீமானுக்கு தமிழீழ போராளிகள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபமாக சீமானிடம் பேட்டி எடுத்தபோது பிரபாகரனின் அண்ணன் மகனை அவர் மோசமான வார்த்தையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தமிழீழ ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தமிழீழ போராளிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “அவசர வேண்டுகோள். அன்பான தமிழீழ மக்களே. அண்மையில் தமிழ்நாட்டில் நிகழும் அரசியல் சதுரங்கத்தில் எமது தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களையும் எமது போராட்டத்தையும் விவாதப்பொருளாக்குவதை பார்த்து மனவேதனைப்படுகிறோம். இது தொடர்பாக எமது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறோம்.
இதன் தொடர்ச்சியாக தலைவரின் பெறாமகனான கார்த்திக் மனோகரனை பொதுவெளியில் மரியாதைக்குறைவாகபேசியது எமது இனத்தை அவமானப்படுத்தியது போலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
வேலுப்பிள்ளை மனோகரன் குடும்பம், மாவீரர் குடும்பங்களில் ஒன்று. தேசியத் தலைவர் அவர்கள் உறவுகளை முதன்மைப்படுத்துபவரல்ல இருந்தாலும் சாள்ஸ் அன்ரனி துவாரகா என்ற இரண்டு மாவீரர்களை இந்த தேசவிடுதலைக்காக கொடுத்தவர்கள்.
தமிழீழ நடைமுறை அரசில் மாவீரர்கள் குடும்பத்தினரை எவ்வாறு தலைவர் அவர்கள் மதிப்பளிப்பார்,என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
எனவே மாவீரர் குடும்பம் ஒன்றின் உறுப்பினர்களை அவமரியாதை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
பொதுவெளியில் பெரியாருக்கு எதிராக தலைவரை வைத்து விவாதத்திற்கு அழைக்கும் சீமான் உடனடியாக இதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தவறும் பட்சத்தில் எமது கடுமையான எதிர்வினையாற்றலை எதிர்கொள்ள நேரிடும். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K