திருச்சி சிறுமி எரித்து கொலை: சீமான் வேண்டுவது என்ன??

செவ்வாய், 7 ஜூலை 2020 (15:18 IST)
திருச்சி சிறுமி கங்காவை வன்கொடுமை செய்து படுகொலை செய்திட்டக் கயவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல். 
 
சீமான் இது குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அச்சிறுமியை‌ இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
 
அண்மைக்காலத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரானப் பாலியல் வன்கொடுமைகள் சமூகம் குறித்தான பெருங்கவலையை‌யும், அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது. அதுவும் பெண் குழந்தைகள் பெருவாரியாக பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவது நாமெல்லாம் நாகரீகம் பெற்ற ஒரு‌ சமூகத்தில்தான்‌ வாழ்கிறோமா? எனும் கேள்வியையெழுப்பி, ஒவ்வொருவரையும் வெட்கித்தலைகுனியச் செய்கிறது.
 
பெண்களுக்கு எதிரான இவ்வன்முறைகளையும், பாலியல் கொடுமைகளையும் வெறுமனே சட்டம் ஒழுங்கு தொடர்பான சிக்கல் என சுருக்க இயலாது. இதுவெல்லாம் அடிப்படையே அறமற்று கட்டமைக்கப்பட்டு, வணிகமாக்கப்பட்ட ஒரு சமூகத்தின் விளைச்சலேயாகும். குழந்தைகளின் வளர்ப்பு முறையில் தொடங்கி, கல்வி, திரைப்படங்கள், ஊடகங்கள் வரை எல்லாவற்றிலும் இதற்கெதிரான மிகப்பெரும் சீர்திருத்தங்களைச் செய்ய முன்வர வேண்டும். 
 
அப்போதுதான் பெண்களை சதைப்பிண்டமாக, போகப்பொருளாக எண்ணும் ஆணாதிக்க உளவியல் வீழ்த்தப்பட்டு, பெண்களுக்கான முழுமையான விடுதலையும், பாதுகாப்பும் சாத்தியப்படும். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான தண்டனைச் சட்டங்களைக் கடுமையாக்கி, அவர்கள் மீதான வழக்கை சிறப்புத் தனி நீதிமன்றங்கள் மூலம் விரைந்து விசாரித்து தண்டனையளிப்பதனால் மட்டுமே இத்தகையக் குற்றங்களை அடியோடு சமூகத்திலிருந்து அகற்ற இயலும்.
 
ஆகவே, சிறுமியை வன்கொடுமை செய்து படுகொலை செய்த கயவர்களைக் கொடுஞ்சட்டத்தில் விரைந்து கைதுசெய்ய வேண்டும் எனவும், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

ஆனால் தற்போதைய தகவலின் படி சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்