சவுக்கு சங்கர் வழக்கு.! இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உத்தரவு..!!

Senthil Velan

வியாழன், 6 ஜூன் 2024 (16:33 IST)
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, புதிதாக விசாரணை நடத்த மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தவிட்டுள்ளார்.
 
பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12 ஆம் தேதி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். 
 
இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பி.பி.பாலாஜி, இந்த வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தார். 
 
இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்,  இந்த வழக்கை மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கே மாற்ற வேண்டும் என்றார்.
 
அப்போது சவுக்கு சங்கர் தாயார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “இந்த வழக்கை மீண்டும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்றும் அவ்வாறு அனுப்பினால் அது நீதித்துறையின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் தெரிவித்தார்.
 
என்ன காரணத்திற்காக சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது என நீதிமன்றம் அறிய விரும்புகிறது என்றும் அதனால் அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று பிற்பகலில் மீண்டும்  விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அரசு பதிலளிக்காமல், விசாரணை அடிப்படையில் அமர்வு நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது என்று கூறினார். அரசு பதிலளித்தால் மட்டுமே மேற்கொண்டு வழக்கில் உத்தரவுகள் பிறப்பிக்க முடியும் என்று நீதிபதி தெரிவித்தார். மூன்றாவது நீதிபதியாக முடிவு எடுக்க தனக்கு போதிய ஆவணங்கள் வேண்டும் என்றும் ஆவணங்கள் இல்லாமல் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதி கூறினார்.

ALSO READ: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்துவதா.? திமுக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்..!!
 
எனவே, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை நீதிபதிகள் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்