சசிகலா விரைவில் பதவியேற்பு, கார்டனில் முதல்வர் சந்திப்பு: அதிமுகவில் பரபரப்பு!

வியாழன், 15 டிசம்பர் 2016 (15:29 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இதனையடுத்து அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி நிலவி வந்தது. இந்நிலையில் சசிகலா தான் அடுத்த பொதுச்செயலாளர் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் அதிமுக நிர்வாகிகள் இன்று அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் அதிமுக பொதுசெயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறினார்.
 
இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என பொன்னையன் பேட்டியளித்ததும் அதன் பின்னர் முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தியதும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. விரைவில் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக அவர் பதவி ஏற்பார் என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்