ரூ. 1430 கோடி வரி ஏய்ப்பு ; 60 போலி நிறுவனங்கள் - ரவுண்டு கட்டி அடித்த சசிகலா குடும்பம்

செவ்வாய், 14 நவம்பர் 2017 (16:07 IST)
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல போலி நிறுவனங்களில் முதலீடு செய்து, பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 

 
கடந்த 5 நாட்களாக சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர் என 187 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை நேற்று மாலை முடிவிற்கு வந்தது. இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சசிகலா குடும்பத்தினர் ரூ.1430 கோடி வருமானத்திற்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பணம் ஏராளமான அசையா சொத்துகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதும், அந்த சொத்துக்கள் தமிழகம் முழுவதும் சுமார் 200 இடங்களில் வாங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
 
அதுபோக கிலோக்கணக்கில் தங்கம் மற்றும் வைர நகைகள் சிக்கியுள்ளன. அவற்றை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர். அதோடு, சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதோடு 16 வங்கி லாக்கர்களை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இன்னும் ஓரிடு நாட்களில் அவற்றை திறந்து அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர். அந்த லாக்கர்களில் முக்கிய ஆவணங்கள் மற்றும் நகைகள் கைப்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
அதேபோல், சொத்து ஆவணங்கள் யார் பெயர்களில் உள்ளதோ அவர்களுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்த துவங்கியுள்ளனர். அந்தவகையில் இதுவரை சுமார் 300 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பல பினாமிகள் சிக்கியுள்ளனர்.
 
நேற்று இரவு விவேக், பூங்குன்றன் மற்றும் புகழேந்தி ஆகிய மூவரிடமும் வருமான வரித்துறை அலுவகத்தில் விசாரணை நடைபெற்றது.மேலும், திவாகரன், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெறவுள்ளது.  


 

 
மேலும், சசிகலா குடும்பத்தினர் 60 போலி நிறுவனங்களை நடத்தி வந்ததும், அதில் பலர் பங்குதாரர்களாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேரிடையாகவும், மறைமுகமாகவும் 355 பேருக்கு இதில் தொடர்புள்ளது. எனவே, அவர்கள் அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள் எனத்தெரிகிறது.
 
முக்கியமாக பல போலி நிறுவனங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் விவேக் மற்றும் அவரின் சகோதரி கிருஷ்ணபிரியா பெயர்களில் வாங்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களிடம் அதிகபட்ச விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்