சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் சசிகலா!

புதன், 21 ஜூன் 2017 (12:43 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா தற்போது அந்நிய செலாவணி வழக்கின் விசாரணையை சந்தித்து வருகிறார்.


 
 
சிறையில் உள்ள சசிகலாவிடம் வீடியோ காண்பரஸ் மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முன்வந்ததையடுத்து அவர் இன்று நண்பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வீடியோ காண்பரஸ் மூலம் ஆஜரானார்.
 
ஜெஜெ டிவிக்கு ஒளிபரப்பு சாதனங்களை வெளிநாட்டில் இருந்து வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த 1996-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை சார்பில் சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
 
இந்த வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருப்பதாலும், அவருக்கு முதுகு வலி இருப்பதாலும் நேரில் ஆஜராவதில் விலக்கு அளித்து காணொளி மூலம் விசாரணை நடத்த சசிகலா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
 
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் காணொளி மூலம் விசாரணை செய்வதற்கு சிறை நிர்வாகத்தின் அனுமதி கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
 
இந்த நடைமுறைகள் எல்லாம் முடிந்து அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தல் இன்று நண்பகல் 12 மணி அளவில் வீடியோ காண்பரஸ் மூலம் சசிகலா ஆஜரானார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்