நாடு முழுவதும் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திர ஷ்ரம் யோகிமான்தன் என்ற பெயரில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் படி 60 வயதை கடந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் நேற்று நடந்தது. இத்திட்டத்தை வரவேற்று பாஜக மின்வாரிய தொழிற்சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு பேனர் ஒன்றை வைத்தனர்.
அதில் ஓய்வூதிய திட்டத் அமல்படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் தாமரை சின்னத்துடன் பிரதமர் மோடி, அமித்ஷா மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் தமிழிசை, தொழிற்சங்க தலைவர் பாண்டிதுரை, சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி உள்ளிட்டோரின் படங்கள் பெரிய அளவில் இடம்பெற்று இருந்தது. சேலம் கலெக்டர் ரோகிணியின் படத்துக்கு கீழ் தொழிலாளர்களின் பிரச்னை என்றால் உடனே தீர்த்து வைக்கும் சேலம் கலெக்டர் என புகழ்நது எழுதப்பட்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக கலெக்டரின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் பாஜகவினர் பேனரை அங்கிருந்து எடுத்து சென்றனர்.