கந்தசஷ்டி கவச விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். அதற்கு பாஜக தமிழக தலைவர் எல்.முருகனும் தனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார். சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா என்பது குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்நிலையில் விரைவில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என கராத்தே தியாகராஜனும் கூறி வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பாஜகவினரே சிலர் ஆதரவாக அடிக்கடி பேசி வருகின்றனர். ரஜினியின் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து சமீபத்தில் பேசியுள்ள பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் “ரஜினி அரசியலுக்கு வந்தார் என்றால் பத்து நாட்களில் முதல்வர் பதவியை அடைவார்” என்று கூறியுள்ளார். ஏற்கனவே ரஜினி கட்சி தொடங்கினால் பாஜக அவருடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களுக்குள் அடிக்கடி பேசப்பட்டு வரும் நிலையில் பாஜகவினரும் ரஜினிக்கு ஆதரவுகளை அளித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளதாக தெரிகிறது.