கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து! – முதல்வர் எடப்பாடியார் அதிரடி உத்தரவு!

வியாழன், 23 ஜூலை 2020 (09:17 IST)
கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழக கல்லூரிகளில் தேர்வுகளை ரத்து செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி பருவத்தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பல்கலைகழக தேர்வுகளை நடத்துவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க யூஜிசி அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து தேர்வு நடத்துவது குறித்து 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கலை மற்றும் அறிவியல் இளநிலை பட்டப்படிப்பில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், முதுநிலை படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி அடுத்த செமஸ்டருக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டு அடுத்த வகுப்பிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தொழில்நுட்ப பட்டயப்படிப்பு மாணவர்களுக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எம்சிஏ படிக்கும் மாணவர்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான பருவதேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு இண்டெர்னல் மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் சதவீதம் வழங்கப்படும் என யூஜிசி தெரிவித்துள்ளது. இதுதவிர அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும் தேர்வு உண்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்