அதிமுக வேட்பாளர் வெளியிட்டுள்ள “ RTI” ஆதாரங்கள் எமக்கான சாட்சியங்களே-சு.வெங்கடேசன் எம்.பி

sinoj

வியாழன், 4 ஏப்ரல் 2024 (19:50 IST)
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்    நாட்டில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவில், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.
 
இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் வெளியிட்டுள்ள “ RTI” ஆதாரங்கள்  எமக்கான சாட்சியங்களே என்று சு.வெங்கடேசன் எம்.பி  தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
’’நிதியில் 17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு ஆங்கில நாளிதழில் அதிமுக வேட்பாளர் சரவணன் தெரிவித்து இருந்தார். அதற்கு நான், 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட 17 கோடிகளில் 245 திட்டங்களுக்கு 16.96 கோடி வரை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பதில் அளித்து இருந்தேன். 
 
அதற்கு விளக்கம் அளித்துள்ள சரவணன் அவர்கள் ஒரு ஆர்.டி.ஐ பதிலை ஆதாரமாக வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த பதில் உண்மையில் அவருக்கான ஆதாரமாக இல்லை. 
 
* அந்த பதிலிலேயே 260 திட்டங்கள் 16.60 கோடிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும், 228 திட்டங்கள் ரூ 15.26 கோடிகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது என்றும் 155 திட்டப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது என்றும் அதே ஆர்.டி.ஐ தெரிவித்துள்ளது. 
 
* அந்த ஆர்.டி.ஐ பதில் அக்டோபர் வரையிலான தகவல்களை மட்டுமே கொண்டுள்ளது. அதற்கு பிந்தைய 5 மாதங்களின் விவரம் அதில் இல்லை. 
 
ஆகவே சரவணன் அவர்களே அவதூறை ஆரம்பித்து வைத்து அதை முடித்து வைத்தும் உள்ளார். ஆர்.டி.ஐ பதிலின் முழு விவரங்களை வெளியிடாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தது அவரின் பதிலிலேயே அம்பலமாகியுள்ளது. 
 
சட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்த பின்னர் சரவணன் இந்த ஆர்.டி.ஐ ஆவணத்தை வெளியிட்டுள்ளார். 5 கோடிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் உண்மை அல்ல என்பது அவர் வெளியிட்டுள்ள ஆவணம் மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது .
 
அநேகமாக அமலாக்க நிலையில் உள்ள எல்லா திட்டங்களிலும் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அனைத்துப் பணிகளும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. 
 
உண்மையை எவராலும் மறைக்க இயலாது’’ என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்