உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினாவில் மக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. தினமும் லட்சக்கணக்கான மக்கள் இந்த கடற்கரைக்கு வந்து பொழுதை கழிக்கின்றனர். இதனால், கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சென்னை மாநகராட்சி பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, "சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளுக்காக டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், டெண்டர் கோரும் நிறுவனங்கள் வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்ட விரிவான அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ரோப் கார் சேவைக்கான மதிப்பாய்வை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.