சக்தி, கௌசல்யா திருமணச் சர்ச்சை – விசாரணை அறிக்கை பகுதி 1
செவ்வாய், 1 ஜனவரி 2019 (13:57 IST)
ஆணவக்கொலையால் தன் உயிரை இழந்த கௌசல்யாவின் மறுமனத்தில் உண்டான சர்ச்சைகளுக்கு விளக்கமளிக்கும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆணவக்கொலையால் தனது கணவர் உடுமலைப் பேட்டை சங்கர் உயிரை இழந்த கௌசல்யா சங்கர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார். சங்கர் இறந்து இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் கௌசல்யா நிமிர் கலையகத்தின் தலைமை ஆசான் சக்தி என்ற நபரை மறுமனம் செய்ய முடிவெடுத்தார். பெரியார் சிலை முன் திராவிட இயக்க தோழர்கள் முன்னிலையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
ஆனால் திருமணம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே கௌசல்யாவை திருமனம் செய்திருக்கும் சக்தி சிலப் பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும். ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டு அவர் கர்ப்பமானதும் அந்த கருவை வற்புறுத்தி கலைக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த விவரங்கள் யாவு கௌசல்யாவுக்கும் தெரியும் என்றும் தெரிந்தும் சக்தியை திருமணம் செய்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் முற்போக்கு திருமணமாகக் கொண்டாடப்பட்ட கௌசல்யா – சக்தி கல்யாணம் சர்ச்சைகளுக்கு உள்ளானது.
இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்து தீர்வு காண்பதற்கு தமுழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் -விடுதலைக் கழகத் தலைவர், கொளத்துர் தா.செ. மணி ஆகிய இருவரிடமும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து அவர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிக்கை விவரம் பின்வருமாறு;-
1) சக்தி-கௌசல்யா திருமணத்துக்குப் பின் சக்தி மீது எழுந்த குற்றச்சாற்றுகளும் அவை குறித்து சமூக ஊடகங்களில் இடம் பெற்ற கருத்துகள், எதிர்க் கருத்துகளும் கவலைக்குரிய முறையில் வளர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில், அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசித் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் பாரதி மற்ற நண்பர்களையும் இணைத்துக் கொண்டு முன்முயற்சி செய்தார். அவர்கள் இந்தச் சிக்கலில் முதன்மைத் தொடர்புள்ள இருதரப்பினரிடமும் ஒப்புதல் பெற்று,த.தே.வி.இ. தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் -விடுதலைக் கழகத் தலைவர், கொளத்துர் தா.செ. மணி ஆகிய எங்கள் இருவரிடமும் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தனர். நாங்கள் இருவரும் 27/12/2018 காலை 10 முதல் இரவு 9 மணி வரை திவிக அலுவலகத்தில் அமர்ந்து, சக்தி-கௌசல்யாவையும், சக்தி மீது குற்றச்சாட்டு கூறியவர்கள், சான்றளிக்க முன்வந்தவர்கள், சக்தி-கௌசல்யா திருமணத்தில் தொடர்புள்ளவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் விசாரித்தோம். முதன்மைத் துயரர் ஒரு பெண், பெயர் வெளியிட இயலாத நிலையில் அவரை ’அந்தப் பெண்’ என்று மட்டும் குறிப்பிடுவோம்.
2) அந்தப் பெண்ணைக் காதலித்து வந்த சக்தி அவரைக் கைவிட்டுப் போய்க் கௌசல்யாவை மணந்து கொண்டார் என்பது முதல் குற்றச்சாட்டு. காதலை மாற்றிக் கொள்ள அவருக்கு உரிமை உண்டென்றாலும், இந்தக் குறிப்பிட்ட நேர்வில் சக்தி அவரைக் கைவிடுவதும் வேறு பெண்ணிடம் செல்வதும் பிறகு மீண்டும் வந்து நம்ப வைத்து ஒன்றுசேர்வதும், மீண்டும் திரும்பிப் போவதுமாக ஒரு முறைக்கு மேல் நடந்திருப்பதும், இந்த வகையில் அந்தப் பெண்ணுக்கு உடல் வகையிலும் உள்ள வகையிலும் கடுமையான மன உளைச்சல் தந்திருப்பதும் குற்றம் என்று கருதுகிறோம்.
3)சொந்த வாழ்வில் ஆணவக் கொலையால் பாதிப்புற்ற கௌசல்யா நீதிக்காக நடத்திய போராட்டத்தையும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான இயக்கத்தில் அவர் வகித்த பங்கையும் சமூக நீதி ஆற்றல்களோடு சேர்ந்து நாமும் வரவேற்றோம். சங்கர் மீதான காதலையே நினைத்துக்கொண்டு கௌசல்யா காலமெல்லாம் கைம்பெண்ணாகவே வாழ வேண்டும் என்ற பத்தாம்பசலி நிலைப்பாட்டிலும் எமக்கு உடன்பாடில்லை. அவர் மீண்டும் காதல் மணம் புரிவது வரவேற்கத்தக்கது என்ற கருத்திலும் மாறுபாடில்லை. ஆனால் சக்தி மீது கொண்ட காதலும், அவரை மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் கருதி சக்தியின் செயலைக் கண்டிக்கத் தவறியது கௌசல்யாவின் பிழையாகும்.
4) நிமிர்வு கலையகத்தின் தலைமை ஆசான் என்ற இடத்தைப் பயன்படுத்தி சக்தி தன்னிடம் பயிற்சி பெற வந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. இப்படி ஒரு குற்றச்சாட்டின் பேரில் ஒரு முறை நிமிர்வு கலையகத்திலிருந்து நீக்கப்பட்டுச் சிறிது காலம் கழித்து மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு திருநங்கையும் சக்தி மீது பாலியல் சீண்டல் குற்றம் சுமத்தியுள்ளார். சக்தி தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவதற்காக வேறு பெண்களைப் பற்றி அவதூறு செய்தார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
5)எம்மிடம் புலனாய்வுப் பொறிமுறையோ நீதி உசாவலுக்குரிய பொறிமுறையோ முடிவுகளைச் செயலாக்குவதற்கான சட்ட வலிமையோ இல்லாத நிலையிலும், தமிழ்க் குமுகம் தந்திருப்பதாக நாங்கள் நம்பும் அற வலிமையையும் அனைத்துத் தரப்பினரும் கொண்ட நம்பிக்கையையும் துணைக்கொண்டு இயன்ற வரை எமது கடமையைச் செய்து முடித்துள்ளோம். தொடர்புடைய அனைவரும் இடம்பெற்ற பொது அவையிலும் கலந்தாய்வு செய்தோம். சான்றியமளிக்க வேண்டிய சிலரிடம் தொலைப்பேசி வழியாகவும் உண்மையறிய முயன்றோம். முடிவுகளை அடைவதிலும் தீர்ப்பை வரைவதிலும் மனிதி செல்வி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத் தோழர் வளர்மதி, ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கத் தோழர் பார்த்திபன் ஆகியோரும் எங்களுக்கு உதவினர். முடிவுகளைப் பொது அவையில் அறிவிக்குமுன் ’அந்தப் பெண்’ணிடமும் கருத்தறிந்தோம். இந்த விசாரணையில் அடைந்த முடிவுகளையும் தீர்ப்பையும் பொது வெளியில் பணிந்தளிக்கிறோம்.
விசாரணையில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் பகுதி 2 –ல்