18 பேர் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு, இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நீதிபதியான நீதிபதி சத்தியநாராயணன் அவர்கள் இந்த வழக்கின் விசாரணையை முடித்துவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில், டிடிவி தினகரன் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை இன்று நேரில் சென்று பார்த்தார். அதன்பின் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் மற்றும் 4 ஆதரவு எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 22 எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் சென்று தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே, தங்க தமிழ்ச்செல்வன், ரத்தினா சபாபதி, பிரபு, கலைச்செல்வன், கருனாஸ் உள்ளிட்ட அனைவரும் குற்றாலம் செல்கின்றனர் என செய்தி வெளியாகியுள்ளது.
எந்நேரத்திலும் தீர்ப்பு வழங்கப்படலாம் என்பதால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அதிமுக தரப்பு ஈடுபடும் என்பதால் அவர்களை குற்றாலத்தில் தங்க வைக்க தினகரன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜெ.வின் மறைவிற்கு பின், ஓ.பி.எஸ் தனியாக களம் இறங்கிய போது, அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டதும், அங்குதான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.