மடியில் கனம் இல்லை, வழியில் பயமில்லை: பஞ்ச் பேசும் எடப்பாடியார்!

வியாழன், 18 அக்டோபர் 2018 (10:19 IST)
அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படத்துக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
 
அதன்பின்னர், உளுந்தூர்பேட்டையில் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் முதல்வர் கலந்துக்கொண்டு பேசினார். அவர் பேசியது பின்வருமாறு,
 
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் 26 ஆண்டுக்காலம் ஆட்சி நடத்தினர். ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியினை நாங்கள் தொடர்கிறோம். எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். 
 
எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. ஆனால், திமுகவுக்கு பயமிருந்தது. அதனால்தான் புதிய தலைமை செயலக வழக்கில் தடையாணை வாங்கியிருந்தனர். 
 
என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர். அதற்காக நாங்கள் ஏதாவது நீதிமன்றத்திற்கு சென்றோமா? விசாரிக்கட்டும் என்றுதான் இருந்தோம். 
 
சென்னை உயர் நீதிமன்றம் என்னைக் குற்றவாளி என்று சொல்லவில்லை. மக்கள் பணிகளில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம், எங்களை சீண்டிவிட்டுவிட்டீர்கள். அதற்கு அனுபவிக்க போகிறீர்கள் என்று பேசியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்