திருப்பூர் மருத்துவர் சரவணன் கொலை ; சி.பி.ஐ விசாரணை வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

புதன், 20 ஜூலை 2016 (17:05 IST)
டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.


 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் சரவணனின் மரணம் தற்கொலை அல்ல என்று அவரது உடற்கூறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வின் முடிவு வெளியாகும் முன்பே சரவணன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வழக்கை முடிக்க நினைத்த தில்லி காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது.
 
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்த சரவணன் கடந்த 2 ஆண்டுகளாக நுழைவுத்தேர்வு எழுதி, இந்த ஆண்டு தான் தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தாம் விரும்பிய பொது மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். எய்ம்ஸ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகவும் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சரவணன் உயிரிழந்து கிடந்த விதம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், இது குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவருடன் படித்த மருத்துவர்கள் வலியுறுத்தினர். 
 
ஆனால், மருத்துவர் சரவணன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வழக்கை முடிக்க தில்லி மாநிலக் காவல்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.
 
மருத்துவர் சரவணனின் மர்ம மரணம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சில மருத்துவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் பா.ம.க இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாசை சென்னையில் சந்தித்து, கொலையை தற்கொலையாக மாற்றுவதற்கு முயற்சி நடப்பதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து தில்லி எய்ம்ஸ் மூத்த மருத்துவர்களை தொடர்பு கொண்டு உடற்கூறு ஆய்வு நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார். அதன்படியே உடற்கூறு ஆய்வு நியாயமாக நடத்தப்பட்டு, சரவணன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சரவணனின் கொலைக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.
 
எனினும், சரவணனை கொலை செய்தவர்களை அடையாளம் கண்டு தண்டனை பெற்றுத் தர இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. மருத்துவர் சரவணனின் வலது கை நரம்பில் ஊசி மூலம் மருந்து செலுத்துவதற்கான சாதனம் பொருத்தப்பட்டு, அதன் வழியாக உயிரைக் குடிக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக வலது கை பழக்கம் உள்ளவர்களால் வலது கையில் இந்த சாதனத்தை பொருத்த முடியாது.

அதுமட்டுமின்றி, சரவணனின் அறைக் கதவு திறந்தே இருந்ததுடன், அவரது உடலில் செலுத்தப்பட்ட மருந்தின் காலி குப்பியையும் காணவில்லை. இதனால் வெளியிலிருந்து வந்த எவரேனும் சரவணனின் உடலில் மருந்தை செலுத்தி கொலை செய்திருக்கலாம் என்று அவரது சக மாணவர்கள் ஐயம் தெரிவித்திருந்த நிலையில், அந்த கோணத்தில் தில்லி காவல்துறை விசாரணை நடத்தியிருந்தால் குற்றவாளியை பல நாட்களுக்கு முன்பே கைது செய்திருக்க முடியும். மருத்துவர் சரவணன் தங்கியிருந்த விடுதியில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டிருக்கக் கூடும் என்பதால் கொலையாளியை அடையாளம் கண்டு கைது செய்வது மிகவும் எளிதானதாகவே இருந்திருக்கும்.
 
ஆனால், தில்லி காவல்துறை அதிகாரிகள் அவ்வாறு செய்யாமல் சரவணனின் இறப்பை தற்கொலை என்று பதிவு செய்வதில் தான் குறியாக இருந்தனர். “சரவணன் தற்கொலை செய்து கொண்டதாகவே கருதுகிறோம். ஏனெனில், அவரது இறப்பில் இதுவரை சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. உடற்கூறு பரிசோதனையின் தொடக்க கட்டத்திலும் எந்த சந்தேகமும் எழவில்லை” என்பதையே தில்லி காவல்துறை துணை ஆணையர் ராஜேந்தர்சிங் பட்டானியா திரும்பத் திரும்ப கூறினார். மருத்துவர் சரவணன் கொலை வழக்கில் யாரையோ காப்பாற்ற தில்லி காவல்துறை முயல்கிறது என்பதையே அதன் அணுகுமுறைகள் காட்டுகின்றன. இவ்வழக்கை தில்லி காவல்துறை தொடர்ந்து விசாரித்தால் மருத்துவர் சரவணன் கொலைக்கு நிச்சயமாக நீதி கிடைக்காது.
 
எனவே, மருத்துவர் சரவணன் மரணம் குறித்த வழக்கை கொலை வழக்காக மாற்றி மத்தியப் புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ) விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு முறைப்படி கோரிக்கை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்