தினகரனுக்கு ஆரத்தி எடுக்க மாட்டோம்; ஆர்.கே.நகர் பெண்கள் போர்க்கொடி

வியாழன், 7 டிசம்பர் 2017 (11:35 IST)
நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரனுக்கு ஆரத்தி எடுக்கமாட்டோம் என அந்த பகுதி பெண்கள் கூறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, தினகரன் தரப்பில் ஓட்டிற்கு ரூ.4 ஆயிரம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், பணப்பட்டுவாடா புகார் எழுந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து, ஓட்டிற்கு கொடுத்த பணத்தை தினகரனின் ஆதரவாளர்கள் சிலர் மக்களிடம் சென்று திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால், அதை கொடுக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால், பணம் வாங்கிய பொதுமக்களை திட்டிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். இதனால், தினகரன் தரப்பு மீது அந்தப் பகுதி பெண்கள் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
அந்நிலையில்தான் வருகிற 21ம் தேதி அந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, விரைவில் தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்யவுள்ளார். எனவே, களத்தில் குதித்த அவரின் ஆதரவாளர்கள், அந்த பகுதி பெண்களிடம் சென்று தினகரன் பிரச்சாரத்திற்கு வரும்போது, அவருக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். அதற்கு ரூ.500 கொடுக்கிறோம் எனக் கூறியதாக தெரிகிறது. ஆனால், மீண்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டால் இந்த பணத்தையும் திருப்பிக் கேட்பார்கள் என கருதிய பெண்கள், தினகரனுக்கு ஆரத்தி எடுக்க மாட்டோம் எனக் கூறிவிட்டார்களாம். இது தினகரன் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், இந்தமுறை ஓட்டுக்குப் பணம் வாங்க மாட்டோம். மனசாட்சி படியே வாக்களிப்போம் எனவும் அந்தப்பகுதி வாக்காளர்கள் பலர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்