பொதுவாக புதுச்சேரியில் விற்கப்படும் மதுபானங்களை வாங்க தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டுவதும், முறைகேடாக மது பாட்டில்களை அங்கிருந்து கொண்டு வர முயற்சிப்பதும், காவல் துறையினரிடம் சிக்குவதும் சாதாரண காலங்களில் நடக்கும் வழக்கமான சம்பவங்களாகும்.
ஆனால் தற்போது கொரோனா காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் மாவட்ட எல்லைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. முக்கியமாக புதுச்சேரி – தமிழக எல்லை கடும் காவல் கண்காணிப்பில் உள்ளது. கோயம்பேடு மார்க்கெட் ஹாட்ஸ்பாட் மூலமாக விழுப்புரம், காரைக்கால் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமானதை தொடர்ந்து கெடுபிடிகளை அதிகப்படுத்தியுள்ள புதுச்சேரி அரசு தமிழக – புதுச்சேரி இடையேயான ஒத்தயடி பாதைகள் உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் மதுபானக்கடைகள் இன்னமும் திறக்கப்படாத நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் புதுச்சேரி மதுப்பிரியர்கள் மது வாங்குவதற்காக தமிழகத்தில் நுழைய தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பலர் தமிழகத்தில் உள்ள தங்கள் உறவினர் மூலமாக மதுவை வாங்கி புதுச்சேரிக்கு கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.