மாந்திரீக பயிற்சி; இளம்பெண் உடல் தோண்டி எடுப்பு; ஐந்து பேர் கைது!

ஞாயிறு, 12 மார்ச் 2017 (10:58 IST)
பெரம்பலூர் எம்.எம் நகரில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சில நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள்  காவல்துறையினரிடம் புகார் அளித்ததின் பேரில், காவல்துறையினர் சோதனையிட்ட போது சவப்பெட்டி ஒன்றில் அழுகிய  நிலையில் இளம்பெண் பிணம் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சோதனையில் அந்த வீட்டிலிருந்து 20 மண்டை ஓடுகள், மனித எலும்புகள் மற்றும் ரத்தம் தோய்ந்த துணிகள் ஆகியவை கைப்பற்றியுள்ளனர்.

 
இதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் தங்கியிருந்த கார்த்திக் மற்றும் அவரது மனைவி நசீமாவை விசாரித்த போது, மாந்திரீகம்  செய்வதற்காக சென்னையில் உள்ள மைலாப்பூர் இடுகாட்டில் இருந்து காரில் பிணத்தை பெரம்பலூருக்கு கடத்தி வந்ததையும்  இருவரும் ஒத்துக் கொண்டுள்ளனர்.
 
இவர்களில் கார்த்திக் பல ஆண்டுகளாக மாந்திரீகம் செய்து வந்துள்ளார். இவரது நண்பரான பாலாஜி என்பவர் கார்த்திக்கிடம்  மாந்திரீகம் கற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். மாந்திரீகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் இளம்பெண் ஒருவரது  இறந்த உடல் வேண்டும் எனவும், அதன் மூலமாக ஆவிகளுடன் பேச முடியும் எனவும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஊழியரான தன்ராஜ் என்பவரை பாலாஜி அணுகி, ரூபாய் 20,000 கொடுத்து பிணத்தை  வாங்கியதாகவும் தெரிகிறது. அபிராமி என்ற கல்லூரி மாணவி கடந்த மாதம் 19-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாகவும்,  அவரது உடல் 20-ஆம் தேதி கைலாசபுரம் இடுகாட்டில் புதைக்கப்பட்டிருப்பதாகவும் தன்ராஜ், பாலாஜிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
 
இதனால் பாலாஜி, தன்ராஜ் மற்றும் அவரது உதவியாளர்கள் உதவியோடு புதைக்கப்பட்டிருந்த அபிராமியின் உடலை தோண்டி  எடுத்துள்ளனர். அதனை பாலாஜி, கார்த்திக்கிடம் ஒப்படைத்துள்ளார். இந்த குற்றத்தில் தொடர்புடைய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்