அதிமுக மாநாட்டிற்கு ஆதரவாக, எதிராக ஒரே இடத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்...வைரல் புகைப்படம்

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (14:51 IST)
ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஒரே இடத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அதிமுகவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் இணைந்து சசிகலா மற்றும் டிடிவி. தினகரனை கட்சியில் இருந்து நீக்கினர்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில், சமீபத்தில், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஓ. பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்கள் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் இணைந்து  செயல்பட்டு வருகிறார்.

இந்த  நிலையில்,  நீதிமன்ற உத்தரவுப்படி, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் மதுரை மாநாடு   நடக்கவுள்ளது. தென் மாவட்டத்தில் நடைபெறும் மிக முக்கிய மாநாடு இது என்பதால் அதிமுக தொண்டர்கள் இதில் அதிகளவில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘’மதுரையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது... எடப்பாடியார் அழைக்கிறார்’’ வாரீர் என்று குறிப்பிட்டு ஒரு போஸ்டர் ஒட்டியிருந்த நிலையில், இதற்கு அருகிலேயே, ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ‘’துரோகம் இழைத்த எடப்பாடி பழனிசாமி நடத்தும் மதுரை துரோக மாநாட்டை தென் மாவட்ட மக்களே புறக்கணிப்பீர், புறக்கணிப்பூர்’ என்று கூறி இந்த மாநாட்டிற்கு எதிராக சிவகங்கையில்  போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்