அஞ்சல் துறையில் தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறதா அரசு?

வெள்ளி, 19 மே 2017 (15:49 IST)
கடந்த ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி நடந்த அஞ்சல்துறை தேர்வை முழுமையாக அரசு ரத்து செய்ததால் இந்த தேர்வை எழுதிய தமிழக மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 
 
இந்த தேர்வில் ஹரியானவை சேர்ந்தவர்கள் தமிழில் அதிக மதிப்பெண் எடுத்த விவகாரம் தேர்வு முடிவு வெளியான நாளில் சர்ச்சைக்குள்ளானது. இந்த தேர்வு முடிவால் தமிழத்தை சேர்ந்த மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின.
 
இதனையடுத்து தேர்வின் இறுதி முடிவை வெளியிடாமல் தேர்வுத்துறை மௌனம் காத்து வந்தது. இந்நிலையில் நேற்று  தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒரு அறிவிப்பு தேர்வுத்துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த முடிவால் முதல் மதிப்பெண் எடுத்த தமிழக மாணவர்கள் நிறைய பேர் பாதிக்கப்படுள்ளனர். தமிழகத்தில் உள்ள 47 இடங்களில் உள்ள அஞ்சல் பிரிவுகளுக்கான தேர்வாகத்தான் இது நடத்தப்படுகிறது.
 
தேர்வுக்கு விண்ணப்பிப்பவர் எந்த வட்டத்தை தேர்வு செய்கிறாரோ அங்கு மட்டும் தான் அவருக்கான போட்டி. அப்படி இருக்கையில் தேர்வு முழுவதையும் எப்படி ரத்து செய்யலாம். 4 பிரிவுகளுக்கான இடங்களில் மட்டும் தான் ஹரியானவை சேர்ந்தவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்வை முழுவதுமாக ரத்து செய்வதாக மட்டும் அறிவித்து விட்டு அதற்கான விளக்கங்கள் எதுவும் வலைதளத்தில் இல்லை.
 
ஹரியானவை சேர்ந்தவர்கள் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட உதவியது தேர்வுத்துறையில் உள்ளவர்கள்தான் அவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மறு தேர்வு எப்பொழுது நடத்தப்படும் எனபது போன்ற பல கேள்விகளுக்கு விடையே இல்லாமல் ஒருதலை பட்சமாக அஞ்சல் துறை நடந்து கொண்டுள்ளது என தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் குழறுபடி நடந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு பணி வாய்ப்பை வழங்க வேண்டும் எனவும் கூறுகின்றனர் மாணவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்