அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து ஆர்கே நகர் இடைத்தேர்தலை சந்திக்கிறது. சசிகலா அணியை சேர்ந்த தினகரனுக்கும், ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனனுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. யார் முன்னிலை பெறுவார், வெற்றி பெறுவார் என்பதில்.
ஓபிஎஸ் அணியின் மதுசூதனன் அந்த தொகுதியில் மிகவும் பிரபலமான, தெரிந்த முகம் என்பதால் வாக்காளர்களை வீடு, வீடாக சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று ஆர்கே நகரில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களிடம் வாக்கு சேகரிக்க சென்ற மதுசூதனனை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நேற்று மதியம் ஒரு மணியளவில் நேதாஜி நகர் பள்ளிவாசலில் வாக்குச் சேகரிக்கச் சென்றார் மதுசூதனன். ஆனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி செல்ல வேண்டாம், தொழுகையை முடிந்து வந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மதுசூதனன், இது என் தொகுதி, அவர்கள் எனக்கு வேண்டிய நண்பர்கள். நான் அவர்களை சந்திப்பதை நீங்கள் எப்படி தடுக்கலாம்? நீங்கள் தினகரன் ஆதரவு போலீஸ் தானே? என்றார்.