வத்திராயிருப்பு அருகே உள்ள கிறிஸ்டியான்பேட்டையில் வசிப்பர் கண்ணன்(25). இவர் சென்னை எண்ணூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அந்நிலையில், அதே கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த அய்யனார்(23) என்ற ஒருவர் பெண் குரலில் பேசி அவரை காதலிப்பதாக கூறி நாடகமாடியுள்ளார். இதை உண்மை என நம்பிய கண்ணன், அய்யனாரை முகநூலில் தொடர்பு கொண்டு புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுள்ளார். அப்போது, மாடலிங் அழகியின் புகைப்படத்தை அய்யனார் அனுப்ப, அதில் மயங்கி கண்ணனும் காதலில் விழுந்துள்ளார்.
ஆனால், நாளடைவில் அய்யனார்தான் பெண் குரலில் பேசி தன்னை ஏமாற்றியது கண்ணனுக்கு தெரிய வந்தது. இதனால், அய்யனாரிடம் தகராறு செய்த கண்ணன், அவமானம் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால், மருத்துவமனையில் அவர் உயிர் பிழைத்தார்.
இருந்தாலும், தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அய்யனாரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்ட கண்ணன், தனது சகோதரர் விஜயகுமார், டென்சிங், தமிழ் ஆகியோரை அழைத்து திட்டம் தீட்டியுள்ளார். அதன் படி, நேற்று இரவு 8.30 மணியளவில், கண்ணன் அழைப்பதாக கூறி அய்யனாரை டென்சிங் அழைத்துள்ளார். போகர்குளம் கண்மாய் அருகே அய்யனார் வந்த போது, மறைந்திருந்த விஜயகுமார் மற்றும் தமிழ் ஆகியோர் அய்யனாரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டென்சிங், விஜயகுமார், தமிழ் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலையில் மூளையாக செயல்பட்ட கண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.