ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தியுள்ள மாணவர்கள்: டாக்டர் ராமதாஸ் பாராட்டு

புதன், 28 செப்டம்பர் 2022 (10:27 IST)
ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தியுள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
அண்மையில் நடைபெற்ற முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் தேர்வுகளில் 7.5% இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 75 விழுக்காட்டினரும், பிற மாணவர்களில் 85 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
 
ஒப்பிட்டளவில் நீட் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், குறைந்த மதிப்பெண் எடுத்து 7.5% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. 10% பெரிய வித்தியாசமல்ல!
 
7.5% இட ஒதுக்கீட்டில்  சேர்ந்தவர்களால்  மருத்துவ படிப்புக்கு ஈடு கொடுக்க முடியுமா? என்று எழுப்பப்பட்ட  ஐயங்களை அரசு பள்ளி மாணவர்கள் தகர்த்திருக்கின்றனர். வாய்ப்பும், தரமான கல்வியும் வழங்கப்பட்டால் தங்களால் சாதிக்க முடியும் என்பதை  அவர்கள் நிரூபித்திருக்கின்றனர்!
 
நீட்டில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே மருத்துவத் தேர்வுகளில் வெல்ல முடியும்; இட ஒதுக்கீடு  கல்வித் தரத்தை குறைத்து விடும் ஆகிய மாயைகளை  அரசு பள்ளி மாணவர்கள் தகர்த்திருக்கின்றனர். ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தியுள்ளனர். வாழ்த்துகள்! சமூக நீதி வெல்லட்டும்!!
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்