தமிழகம் வரும் பிரதமரை சந்திக்கும் ஈபிஎஸ் -ஓபிஎஸ்.. இணைப்பு நடக்குமா?

Mahendran

வெள்ளி, 25 ஜூலை 2025 (13:23 IST)
ஜூலை 26ஆம் தேதி  தமிழகத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ள நிலையில், அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். இதனால் பிரதமர் வரும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க தேதி கேட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தங்கள் கூட்டணியை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தின. இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக தமிழகம் வரும் பிரதமர், கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடியும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து பேசுவார்கள் என்றும் பரவலாக கூறப்பட்டது. 
 
இந்நிலையில், அடுத்தகட்டமாக பிரதமர் மோடியை முன்னாள் ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த கோரிக்கை, தமிழக அரசியலில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையே நிலவும் உட்கட்சிப் பூசல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், ஓ.பி.எஸ். பிரதமரைச் சந்திக்க இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
இந்தச் சந்திப்பு, அ.தி.மு.க.வின் அரசியல் நிலவரத்திலும், பா.ஜ.க.வின் நிலைப்பாட்டிலும் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்துமா என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளது. பிரதமரின் தமிழக வருகை, வரும் தமிழக அரசியலில் ஒரு பெரும் தாக்கத்தையும், பரபரப்பான நிகழ்வுகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்