சென்னை ஆளுநர் மாளிகையில் வள்ளலார் சிலை திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில் இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரைநிகழ்த்தினார். அப்போது அவர் கூறியபோது, கடவுளைப் பற்றிய வள்ளலாரின் பார்வை, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டவை.
இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கடவுளின் அம்சத்தை கண்டார் வள்ளலார். சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதாக வள்ளலாரின் போதனைகள் இருந்தது. அன்பு, இரக்கம், நீதி போன்றவற்றை வலியுறுத்தும் வள்ளலாரின் போதனைகளை நாம் பரப்புவோம்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதேபோல் தமிழக அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டரில் இதுகுறித்து கூறியபோது, பிறப்பால் சாதி வேறுபாடு காண்பதைக் கண்டித்து, எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும் என்ற புரட்சித் துறவி வள்ளலாருக்கு இன்று 200ஆம் ஆண்டு பிறந்தநாள்!
சூழ்ச்சிகளால் வரலாற்றை திரிப்பவர்கள், எவ்வளவு முயற்சித்தாலும் வள்ளலார் என்றுமே சமத்துவத்தின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்வார். உலகில் சகல துன்பங்களுக்கும் காரணம் பசிக்கொடுமை தான் என்றுணர்ந்த வள்ளலார் வடலூரில் அன்று மூட்டிய அணையா அடுப்பின் நெருப்பு ஒளி தான் இன்று பள்ளிகளில் காலை உணவு திட்டம் என பரந்திருக்கிறது. வள்ளலாரின் புரட்சிக் கருத்துகளை உலகறிய செய்வோம். நாமும் கடைப்பிடிப்போம் என்று பதிவு செய்துள்ளார்.