பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

Siva

புதன், 26 மார்ச் 2025 (09:43 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இறுதியாக நடைபெற்ற இயற்பியல் தேர்வு சற்றே கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியிடப்படும்.
 
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் 3,316 மையங்களில் 7,518 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இறுதியாக இயற்பியல் தேர்வு நடைபெற்றது.
 
பொதுத்தேர்வு முடிவடைந்ததும் அனைத்து பள்ளிகளிலும் மதியம் 1.15 மணிக்கு  ஆசிரியர்கள் தேர்வு அறையில் இருந்து மாணவர்களை வெளியே அனுப்பினர். அதற்கிடையில், பள்ளியின் வளாகத்தில் திடீரென பட்டாசு வெடித்தது. பல்வேறு சோதனைகள் இருந்தபோதும், மாணவர்கள் பட்டாசுகளை எடுத்து வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கடைசி நாள் கொண்டாட்டம் என்பதால் மாணவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
 
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்ததையடுத்து, விடைத்தாள்கள் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 80-க்கும் அதிகமான மதிப்பீட்டு மையங்களுக்கு இன்று முதல் விடைத்தாள்கள் அனுப்பப்படும். ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை  ஆசிரியர்கள் மதிப்பீட்டில் ஈடுபடுவார்கள். தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 9ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது..

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்