திறக்கப்பட்ட மதுக்கடைகள்! – ட்ரெண்டான #தாங்குமா தமிழகம்

வெள்ளி, 8 மே 2020 (11:46 IST)
தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்புகளிலிருந்து தமிழகம் மீளுமா என்று கேள்வி எழுப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. அதிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை மற்றும் சில பகுதிகளை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. மதுபானக்கடைகளை திறப்பதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரிக்கும் என எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று மதுபானக்கடைகள் திறக்கப்பட்டதையொட்டி காலை முதலே மதுபானக்கடைகள் முன்பு மக்கள் கூட்டம் கூட்டமாக க்யூவில் நின்ற காட்சிகள் நேற்று முதலே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இத்தனை நாட்கள் ஊரடங்கிலும் மளிகை கடை செல்வதற்கு கூட இருவர் சேர்ந்து செல்லக்கூடாது என ரூல்ஸ் போட்ட அரசு தற்போது நூற்றுக்கணக்கானவர்கள் முட்டி மோதி கொண்டு மது வாங்க நிற்பதை அனுமதிப்பதாக பலர் கூறி வருகின்றனர்.

அரசின் இந்த செயல்பாடுகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க போவதாக தெரிவித்து சமூக ஆர்வலர்கள் பலர் ட்விட்டரில் #தாங்குமா தமிழகம் என்ற பெயரில் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்