கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை தண்டிக்க கூடாது! – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
வியாழன், 24 மார்ச் 2022 (10:45 IST)
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தாவிட்டால் அவர்களை தண்டிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு பிறகு மீண்டும் நேரடி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால் மாணவர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்வுகள் நெருங்கி வருவதால் கல்வி கட்டணம் செலுத்த தனியார் பள்ளிகள் மாணவர்களை நெருக்கி வருவதாகவும், கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைப்பது உள்ளிட்ட தண்டனைகளை தருவதாகவும் புகார்கள் நிலவுகின்றன.
இதுகுறித்து தனியார் பள்ளிகளுக்கு புதிய உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே நிற்க வைக்கவில்லை என தனியார் பள்ளிகள் உறுதியளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.