எஸ்.ஆர்.எம். பச்சமுத்துவிற்கு ஜாமீன் இல்லை : 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

சனி, 27 ஆகஸ்ட் 2016 (09:06 IST)
மருத்து சேர்க்கையில் பல கோடி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட பச்சமுத்துவை வருகிற 9ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


 

 
எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவரும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவருமான பச்சமுத்து நேற்று போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
 
பாரிவேந்தர் என்றழைக்கப்படுவபர் பச்சமுத்து. வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவான விவகாரத்தில் பச்சமுத்துவை ஏன் விசாரிக்கவில்லை என்று நீதிமன்றம் சமீபத்தில் போலீசாரிடம் கேள்வி எழுப்பியிருந்தது.  மேலும் மருத்துவ சீட் தொடர்பாக பலரிடம் அவர் பண மோசடி செய்ததாக புகாரும் எழுந்தது. 
 
இதையடுத்து கடந்த 25ஆம் தேதி அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 14 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் சென்னையில் நேற்று மதியம் அவரை போலீசார் கைது செய்தனர்.
 
மருத்துவ கல்லூரி மாணவர்களின் சேர்க்கையில் ரூ.72 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாகவும், பணம் கொடுத்த 108 மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அடிப்படையில், போலீசார் அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
அதன்பின் நெஞ்சுவலி வந்ததால், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் இரவு 10 மணியளவில் அவர் சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.  அவரை செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
 
அவருக்காக உடனடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. அவரது மனு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்