அம்மா உணவகம் செயல்படவும் நடவடிக்கை எடுத்து ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை.
தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்கள் தரமான உணவை மலிவு விலையில் பெறும் வகையில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 403 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் சிலவற்றில் சமீப காலமாக இரவு நேரத்தில் சப்பாத்திக்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். அவர் அதில் குறிபிட்டுள்ளதாவது, அம்மா உணவகங்கள் என்பது ஏழை எளிய மக்களுக்கான உணவகங்கள். இந்த உணவகங்களில் காலையில் இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதியம் கலவை சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், இரவில் சப்பாத்தி 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கரோனா ஊரடங்கின்போது ஏழை எளிய மக்களுக்கு அட்சயபாத்திரமாக இந்த உணவகங்கள் விளங்கின. ஆனால், இந்த உணவகங்களின் செயல்பாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதில் இட்லி, தக்காளி சாதம் போன்றவை வழங்கப்பட்டு வருவதாகவும், கோதுமை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் சப்பாத்தி வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலேயே இந்த நிலைமை என்றால், பிற மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கும். இந்தத் திட்டம் ஏழைகளுக்கான திட்டம் என்பதால், நிதி நெருக்கடியைக் காரணம் காண்பித்துப் படிப்படியாக இந்தத் திட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி விநியோகத்தை மீண்டும் தொடங்கவும், இந்தத் திட்டம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படவும் நடவடிக்கை எடுத்து ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.