ஒ.பி.எஸ் அணியின் கறார் நிபந்தனைகள் - இரு அணிகளும் இணையுமா?

வியாழன், 20 ஏப்ரல் 2017 (18:28 IST)
தினகரனை ஓரங்கட்டுவதற்காக சசிகலா குடும்பம் நடத்தும் திட்டமிட்ட நாடகம்தான், அதிமுக அமைச்சர்களின் மனமாற்றத்திற்கு காரணம் என ஓ.பி.எஸ் அணி குற்றம் சுமத்தியுள்ளதால், இரு அணிகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெறுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


 

 
அதிமுக அமைச்சர்கள் ஒன்று கூடி தினகரனை கட்சியிலிருந்து விலக்குவது என சமீபத்தில் முடிவெடுத்தனர். ஏற்கனவே, பல புகார்களிலும், வழக்குகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தினகரன், கட்சியிலிருந்து விலகி விட்டதாக அறிவித்து விட்டார். எனவே, இரு அணிகளும் இணைந்து நாளை பேச்சு வார்த்தை நடத்தி யாருக்கு முக்கிய பதவிகள் என்பது குறித்து விவாதிக்க உள்ளனர். 
 
இந்நிலையில், இரு அணிகளை சேர்ந்தவர்கள் ஊடகங்களில் தெரிவித்து வரும் கருத்துகள், அவர்களுக்குள் கருத்து மோதலை ஏற்படுத்தி வருகிறது. ஓ.பி.எஸ்-ற்கு முதல்வர் பதவி கொடுக்க முடியாது என தம்பிதுரை இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசினார். இதற்கு ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.  மேலும்  “ சசிகலா, தினகரன் ஆகிய இருவரிடமும் ராஜினாமா கடிதம் பெற்று கழக அறிக்கையாக வெளியிட வேண்டும்.


 


ஏனெனில், சசிகலாவால் நியமிக்கப்பட்டதுதான் எடப்பாடி பழனிச்சாமி அரசு. அந்த அணியில் உள்ள அனைவரும் ஊழலில் திளைத்தவர்கள். பதவிக்காக தற்போது மக்கள் செல்வாக்கு இருக்கும் ஓ.பி.எஸ் பக்கம்  சேரத் துடிக்கிறார்கள். மேலும், முதல்வர் பதவியை நாங்கள் கேட்கவில்லை. இந்நிலையில், தம்பிதுரை தவறான கருத்துகளை பேசி வருகிறார். அவரை யாரும் கட்சியில் மதிப்பது கூட இல்லை. நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்ளவே அவர் இப்படி நடந்து கொள்கிறார்.
 
முக்கியமாக, தினகரனை ஓரங்கட்டுவதற்காக சசிகலா குடும்பம் நடத்தும் திட்டமிட்ட நாடகம்தான், அதிமுக அமைச்சர்களின் மனமாற்றத்திற்கு காரணம் என எங்களுக்கு செய்திகள் வருகிறது. எனவே, அவர்கள் எங்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்” என்று பேசியுள்ளார்.
 
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி அணி “பேச்சு வார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலில் ஒன்றாக இணைந்து பேசுவோம். இப்போதே, இது போன்ற கோரிக்கைகளை வைக்க வேண்டாம். ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை” எனக் கூறி வருகிறார்கள்...
 
இப்படி இரண்டு அணியை சேர்ந்தவர்களும் பிடி கொடுக்கமால் பேசி வருவதால், நாளை பேச்சு வார்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்