நான் சசிகலாவை சமாளித்தேன் ; மற்றவராக இருந்தால் தற்கொலைதான் - ஓ.பி.எஸ்

சனி, 17 பிப்ரவரி 2018 (11:44 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருந்ததால், சசிகலா குடும்பத்தினர் தனக்கு துரோகி பட்டத்தை கொடுத்தனர் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.

 
ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு ஓ.பி.எஸ் பேசியதாவது:
 
நான் ஜெ.விற்கு விசுவாசமாக இருந்தேன். அதனால்தான் அவர் என்னை இரண்டு முறை முதல்வர் பதவியில் அமர வைத்தார். எனக்கு அது போதும். பிரதமர் மோடி கூறியதால்தான் இரு அணிகளையும் இணைத்தேன். அவர்தான் நான் அமைச்சரவையில் நீடிக்க வேண்டும் எனக் கூறினார். 
 
என்னை மீண்டும் பழைய தொழிலுக்கு அனுப்புவேன் என தினகரன் கூறியுள்ளர். நான் ஒன்றும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கவில்லை.  தினகரனிடம் பேசவே கூடாது என எனக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும், அவருடன் பேசுகிறீர்களா? என அடிக்கடி என்னிடம் ஜெ. கேட்பார். நீங்கள் ஒருவராவது விசுவாசமாக நடந்து கொள்ளுங்கள் என அவர் கூறுவார்.
 
நான் உயிருடன் இருக்கும் வரை தினகரனை வீட்டிற்குள் நுழைய விட மாட்டேன் என ஜெ. கூறுவார். 2016ம் ஆண்டும் தேர்தலில் சசிகலா குடும்பத்தின் எதிர்ப்பை மீறித்தான் ஜெ. எனக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்தார். அப்போது, என்னை தோற்கடிக்க சசிகலா குடும்பத்தினர், குறிப்பாக தினகரன் சதி செய்தார். தேர்தலில் என்னை தோற்கடித்து, அணிந்த ஆடையோடு வீட்டிற்கு அனுப்புவேன் என சசிகலா சபதம் போட்டார். ஆனால், அது நடக்கவில்லை.

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். நான் சமாளித்தேன். மற்றவராக இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். நான் அமைதியாக இருக்கிறேன் என்பதால் எதுவும் கூற மாட்டேன் என சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் நினைக்கிறார்கள். ஆனால்,கோபம் வரும் போதெல்லாம் உண்மைகள் வெளியே வரும். அவர்களை பற்றி கொஞ்சம்தான் கூறியிருக்கிறேன்” என அவர் பேசினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்