தூத்துக்குடி துப்பாக்கி சூடு - துணைமுதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆறுதல்
திங்கள், 28 மே 2018 (08:40 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவத்திற்கு நாடெங்கும் பலர் அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை ஆளிங்கட்சியினர் யாரும் சென்று பார்க்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவந்தனர்.
இந்நிலையில் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது மக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இன்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலவரத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள்.