நேற்று செய்தியாளர்கள் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் மற்றும் ஜெ.வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் வீடு நினைவிடமாக மாற்றப்படும் என அறிவித்தார். தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இது அரசியல் காய் நகர்த்தல் எனவும், இரு அணிகளும் மீண்டும் இணைய வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் நாடகம் எனவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால், ஓ.பி.எஸ் அணியின் அனைத்து கோரிக்கைகளையும் எடப்பாடி அணி நிறைவேற்றி விட்டது. எனவே, இரு அணிகளும் விரைவில் இணைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளரிடம் கருத்து தெரிவித்துள்ள கே.பி.முனுசாமி “தேர்தல் கமிஷனில் எடப்பாடி அணி சமர்பித்துள்ள பிரமாண பத்திரத்தை வாபஸ் பெற்றால் மட்டுமே கட்சியிலிருந்து சசிகலாவை நீக்கியதாக கருதப்படும். அதை இதுவரை அவர்கள் செய்யவில்லை. மேலும், ஜெ.வின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஓய்வு பெற்ற நீதிபதி விசாரித்தால் உண்மை வெளியே வரும் என்பது சந்தேகமே. எனவே இது இரண்டும் நடக்கும் வரை அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்பே இல்லை” என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அதே சமயம், ஜெ. வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.