ஓ.பி.எஸ் - எடப்பாடி அணியினர் பேச்சு வார்த்தை - இரு அணிகளும் இணைகிறது?
செவ்வாய், 4 ஜூலை 2017 (11:47 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் ஓபிஎஸ் அணியை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவதாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் அதிமுக அம்மா அணி எனவும், ஓ.பி.எஸ் அணியினர் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி எனவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். தினகரன் உட்பட சசிகலாவின் குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற ஓ.பி.எஸ் அணியினரின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், இரு அணிகளும் இணைவதற்கு சாத்தியம் இல்லாமல் போனது.
இதற்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவையும், கலைத்து விட்டதாக சமீபத்தில் ஓ.பி.எஸ் அறிவித்தார். மேலும், இரு அணிகளும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என ஓ.பி.எஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில் இரு அணிகளும் மீண்டும் இணையும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் “ முதல்வருடன் ஓ.பி.எஸ் அணியினர் சந்தித்து பேசி வருகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. பேச்சுவார்த்தை கலைக்கப்பட்டாலும் அணிகள் இணைய பேச்சு வார்த்தை தொடர்கிறது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தொடர ஓ.பி.எஸ் அணி ஒப்புதல் அளித்துள்ளது. அதிமுகவை வழி நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைக்க இரு அணிகளும் திட்டமிட்டுள்ளோம். அதில், ஒபிஎஸ் தரப்பில் 2 பேரும் எடப்பாடி தரப்பில் 3 பேர் அதில் இருப்பார்கள். கட்சியை வழிநடத்தும் குழு தலைவராக ஓபிஎஸ் மற்றும் துணைத் தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்க வாய்ப்புள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
இரு அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதால், விரைவில் சுமூக தீர்வு ஏற்பட்டு அதிமுக ஒரே அணியாக செயல்படும் எனத் தெரிகிறது.
இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்திலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.